முந்தைய முயற்சி

Saturday, 12 March 2011

வதந்திகளால் கட்டமைக்கப் படும் தமிழ் செய்தி உலகம்

கவுண்டம் பாளையத்தில் ஜெயலலிதா போட்டி: தமிழ் ஓசை (பா ம க நாளிதழ்)
திருவாரூரில் கருணாநிதி போட்டி : தினத்தந்தி
தொகுதிக்கு 70 வேட்பாளர்களை நிறுத்தி வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தவிர்க்க அதிமுக திட்டம்: தினமணி


தமிழ் நாளிதழ்கள் வதந்திகளைப் பெரிதும் நம்பியே இயங்கிக் கொண்டிருக்கின்ற்ன. செய்திகளுக்கு உரிய ஆதாரங்களை உரிமைப் படுத்தும் (attribution) முயற்சிகளை அவை பொருட்படுத்துவதில்லை என்று உறுதியாகக் கூறுவதற்கு ஏராளமான சான்றுகளைச் சொல்ல முடியும்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்
தொகுதி மாறுகிறார் செயலலிதா
ஆண்டிப்பட்டிக்குப் பதில் கவுண்டப் பாளையத்தில் போட்டியிட முடிவு

என்ற தலைப்பிட்ட செய்தி 12 030211 நாளிட்ட தமிழ் ஓசை நாளிதழின் 5ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தி முழுக்க இதற்கான ஆதாரம் எதையும் அந்த நாளிதழ் மேற்கோள் காட்டவில்லை.
ஓரிடத்தில்  அதிமுக வுக்கு நெருக்கமான் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர் என்றும், இன்னுமொரு இடத்தில், அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன என்றும் , இன்னுமொரு இடத்தில் அதிமுக மூத்த நிருவாகி ஒருவர் தெரிவித்தார் என்றும் சொல்லிக் கொண்டே போகும் இச்செய்தி, ஏன் ஆண்டிப்பட்டியை விடுத்து கவுண்டம்பாளையத்தை, அதிமுக பொதுச் செயலர் தெரிவு செய்யவிருக்கின்றார் என்பதற்கு நம்பும் படியான வாதங்களை முன்வைத்துள்ளது. ஆனால், மூன்று விதமான தகவல் மூலங்களைக் கொண்டு கட்டமைக்கும் இச்செய்தியில் ஏன் ஒருவரைக் கூட மேற்கோள் காட்ட இயலவில்லை. இச்செய்தி உண்மையாகக் கூட அமைந்து விடலாம். ஆனால், உரிமையாக்கிக் கூறாமல் (attribution) , வெளியிடப் படும் செய்தி, வதந்திக்கு உரிய மரியாதையையே பெறும் என்பதை இவர்கள் கவனிப்பதில்லையே ஏன் ?
இது பா ம க நடத்தும் பத்திரிகைக்கு மட்டுமே உரிய பிரச்னை அல்ல.
தினத்தந்தியில் இன்று (12 3 2011) புதுச்சேரிப் பதிப்பின் 5ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள கீழ்க்கண்ட செய்தியைக் கவனியுங்கள் :
இந்தச் செய்தியிலும் உரிமையாக்கிக் கூறப்படும் முயற்சி எதுவும் இல்லை. இது உண்மையாகவும் இருக்கலாம். இந்தக் கணிப்பு தவறாகி செய்தி பொய்யாகப் போகும் வாய்ப்பும் உண்டு.
ஆனால்,  அது குறித்த எந்த அச்சமும் தினத்தந்தியிடம் இல்லை.

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டி?
வேறு யாரும் அங்கு விணணப்பிக்கவில்லை



சென்னை, மார்ச்.12-

தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களில் திருவாரூர் தொகுதியில் முதல்-அமைச்சர் கருணாநிதி போட்டியிட வேணடும் என்று 750 பேர் மனு கொடுத்திருந்தனர். அந்த தொகுதியில் தாங்கள் போட்டியிட வேணடுமென்று விருப்பம் தெரிவித்து வேறு யாரும் விணணப்பம் தாக்கல் செய்யவில்லை.

ஆகவே திருவாரூர் தொகுதியில் முதல்-அமைச்சர் கருணாநிதி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்து தினமணியில் வெளியாகியுள்ள கீழ்க்கண்ட செய்தியைக் கவனியுங்கள்:  நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு இயந்திர வாக்குப் பதிவு முறையைத் தடுக்க ஒவ்வொரு தொகுதியிலும் 70 பேரை போட்டியிட வைப்பது குறித்து அதிமுக சிந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது என்பது தான் செய்தி. செய்தி முழுக்க ஒரு முக்கிய திட்டம் குறித்து விரிவாக விளக்கப் படுகின்றது. ஆனால், எங்குமே யாரையுமே மேற்கோள் காட்டாமல் இது ஒரு கற்பனயான செய்தியா, வதந்தியா, அல்லது அதிமுக உண்மையிலேயே இப்படி ஒரு திட்டமிட்ட காரியத்தில் இறங்கப்
போகிறதா என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு உள்ளது.  முதலில் இந்த சதித் திட்டத்தை விளக்கும் செய்தியை வாசியுங்கள் :


மின்னணு வாக்குப் பதிவைத் தடுக்க புதிய உத்தி 

ஒவ்வொரு தொகுதியிலும் 70 பேர் போட்டி?


சென்னை, மார்ச் 11: நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு இயந்திர வாக்குப் பதிவு முறையைத் தடுக்க ஒவ்வொரு தொகுதியிலும் 70 பேரை போட்டியிட வைப்பது குறித்து அதிமுக சிந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட, வட்டார, ஒன்றிய அளவிலான நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக கேரளத்தில் உள்ள பாரூர் சட்டப்பேரவை தொகுதியில் 50 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படிப்படியாக முழு அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் ஒரு தொகுதியில் அதிகபட்சமாக 64 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்பது மின்னணு வாக்குப்பதிவில் உள்ள குறையாகும்.

வாக்குச் சீட்டு முறையில் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு வெளியாக 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை ஆனது. ஆனால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தேர்தல் முடிவுகள் 3 அல்லது 4 மணி நேரத்தில் வெளியிடப்பட்டன.
இதனால் அரசியல் கட்சிகள் தொடக்கத்தில் இதை வரவேற்றன. ஆனால் அடுத்தடுத்த தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்வதாக பரவலாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விளக்கம் அளித்தது. தவிர சந்தேகம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகளை தனித்தனியாகவும் அழைத்து செயல்முறை விளக்கம் மூலம் சந்தேகங்களை நீக்க முயற்சி செய்தது. ஆனால் பிரதான தேசிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா உள்பட பல கட்சிகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து சந்தேகத்தை எழுப்பி வருகின்றன. இருப்பினும் இந்த சந்தேகங்களை தேர்தல் ஆணையம் முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைக்கு அதிமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
எனவே தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் 64 பேருக்கு அதிகமாக அதாவது சுமார் 70 பேரை போட்டியிடச் செய்ய திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
64 பேருக்கு மேல் போட்டியிட்டால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. பழைய முறையான வாக்குச் சீட்டு முறையில்தான் தேர்தல் நடந்த முடியும்.
அண்மையில் ஆந்திரத்தின் தெலங்கானா பகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் சில தொகுதிகளில் 64 பேருக்கும் அதிகமாக போட்டியிட்டதால் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடந்தது.ஆனால் 234 தொகுதிகளிலும் 70 பேரை போட்டியிடச் செய்வது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்களால் எழுப்பப்படுகிறது.

தினமலரில் எது செய்தி, எது வதந்தி, எது பொய், எது உண்மை என்று வித்தியாசம் காணும் முயற்சியே வேண்டாம்.  எந்தச் செய்தியிலும் உரிமையாக்கிக் கூறும் பண்பையே காண முடியவில்லை.தினகரனிலும் இதே நிலவரம் தான்.  இனிவரும் காலங்களில் முறையாக அறிக்கையிடப் பட்ட செய்தி என்று ஏதேனும் தென் பட்டால், கட்டாயம் இங்கே பதிவு செய்வோம்.
இதில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத் தக்கவை:
1. செய்திகளை உரிய முறையில் அறிக்கையிட,எந்தத் தமிழ் நாளிதழும் மெனக்கிடுவதேயில்லை.  இதற்கு அறியாமை காரணமா ? பயிற்சி இன்மை காரணமா ?
2. அல்லது தமிழ் வாசகப் பெருமக்களுக்கு இப்படி அரையும் குறையுமாகச் செய்தியைக் கொடுத்தால் போதும் என்று தமிழ் வாசகர்கள் பற்றிய தாழ்வான மதிப்பீடு காரணமா ?
ஆய்வாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment