Friday, 18 March 2011

மைய நீரோட்ட நாளிதழ்களில் தலித் அரசியலுக்கான இடமில்லையே ஏன் ?

 நம் ஆய்வுக்கு உட்படுத்தி வரும் தமிழ் நாளிதழ்கள் நான்கிலுமே (தினத்தந்தி, தினம்ணி, தினமலர், தினகரன்), தலித் இயக்க்ங்களின் அரசியலை ஆரோக்கியமான் போக்கில் செய்திகளாகவும், ஆய்வுரைகளாகவும் வெளியிடுவதைக் காண இயலவில்லை என்பதை, ஏற்கனவே இங்கு பதிவு செய்திருக்கின்றோம்.  குறிப்பாக, அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தொடங்கவுள்ள் நிலையில், இவை குறித்து இன்னும் கூடுதல் அக்கறையுடன் அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டிய நிலையுள்ளது.

க்டந்த ஞாயிறன்று வெளியான கல்கி வார இதழில்,  தலித் கட்சிகள்: வெற்றி சக்தியா? பகடைக்காயா?,  என்ற தலைப்பில் ,
ரமணன் என்பவர் எழுதிய்ள்ள கட்டுரை இடம்பெற்றுள்ளது. தலித் தலைவர்களை மேற்கோள் காட்டியும்,  தலித் அரசியல் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர் ஒருவரின் பேட்டியுடனும் இந்த ஆய்வுரை இடம் பெற்றுள்ளது.

தமிழ் நாளேடுக்ளை ஒப்பிடுகையில் கல்கி ஒரு ஆய்வுரை எழுதுமளவு கவனத்தைக் குவித்திருப்பது கவனிக்கத் தக்கது.
எனினும் கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனைத்து கருத்துகளும் தலித் அரசியல் நோக்கில் ஏற்புடையவையா என்பது  குறித்து தனியாக ஆராய வேண்டும்.

உடனடி வாசிப்பு வசதிக்காக கட்டுரையும், அதன் ஆன்லைன் பதிப்பு முகவரியும் கீழே தரப்பட்டுள்ளது.



தலித் கட்சிகள்:

வெற்றி சக்தியா? பகடைக்காயா?

ரமணன்
ஒவ்வொரு தேர்தல் அறிவிப்பு வந்தவுடனும் தலித் வோட்டு வங்கி பரபரப்பாகப் பேசப்படுவது வழக்க மாகிவிட்டது. உண்மையிலேயே இந்த தலித் கட்சிகள், கூட்டணி வெற்றிக்கு ஒரு பெரிய சக்தியாக இருந்து உதவுகின்றனவா? அல்லது எதிரணியின் வோட்டுகளைப் பிரிக்க மட்டுமே பயன்படும் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப் படுகின்றனவா?
தமிழக மக்கள்தொகையில் 19 சதவிகிதத்தினர் தலித் மக்கள். தேசிய அளவில் சராசரி 16 சதவிகிதம்தான். ஆனால், இங்கு இவர்கள் எந்த ஒரு தேர்தலிலும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்ததில்லை. தமிழகத்தைவிட 2 சதவிகிதம் மட்டுமே அதிக தலித் மக்கள்தொகை கொண்ட உத்திரப்பிரதேசத்தின் அரசியல் தலையெழுத்தை மாற்றியவர்கள் தலித் மக்கள்தான்! சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே பிரிட்டிஷ் அரசிடம் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி நடந்த பூனா வட்டமேஜை மாநாட்டில், மதுரையிலிருந்து சென்று பங்கு பெற்று தனி வோட்டுரிமை, போட்டியிடத் தொகுதிகள் என்பதையெல்லாம் வலியுறுத்தி, சட்ட ரீதியாகப் பெற்றதில் தமிழ் தலித்துகளுக்குப் பெரும் பங்கு இருந்திருக்கிறது. ஆனால் அந்தப் பாரம்பரியங்களெல்லாம் இன்று பழங்கதைகளாகி, திராவிடக் கட்சிகளின் தயவில் தலித் இயக்கங்கள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.
அதன் தலைவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் இணைந்து கொள்கிறார்களே தவிர வெற்றிவாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக இல்லை. கடந்த இருபதாண்டுகளாக இதுதான் நிலைமை.
மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோலை கூறும்போது,
“அப்படி ஒரேயடியாகச் சொல்ல முடியாது! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் காங்கிரஸ் வேட்பாளர் சித்தன் அந்தத் தொகுதிக்குச் சற்றும் சம்பந்தமில்லாதவர். எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் அந்தப் பகுதியில் அதிகம் இருக்கும் கொங்கு வேளாளர் இனத்தவர். அதனால் வெற்றி வாய்ப்பு அவருக்குத்தான் அதிகம் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தொகுதியின் தலித் வோட்டுகள் 90,000. விடுதலைச் சிறுத்தைகளின் உதவியால் அது சிதறாமல் காங்கிரஸுக்குக் கிடைத்து சித்தன் வெற்றி பெற்றார். இதேபோல் கரூர், மதுரை தொகுதிகளிலும். நிச்சயமாக விடுதலைச் சிறுத்தைகள் வெற்றிவாய்ப்பை உருவாக்கும் சக்தி பெற்றவர்கள்.”
இந்தக் கருத்திலிருந்து மாறுபடுகிறார் ஹ்யூகோ காரின்ஞ். (Hugo Gorringe, Lecturer in Sociology at the University of Edinburgh.) இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விரிவுரையாளர்.
“ஒருசில இடங்களில் கிடைத்த அரசியல் வெற்றிகளினால் இவர்களை வலிமையான சக்தி என்று சொல்லிவிடமுடியாது. வலிமையான சக்தியாக உருவாகியிருக்க வேண்டிய இவர்கள் சில சீட்டுகளுக்காகவும் அரசியல் லாபங்களுக்காகவும் தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளின் தயவை நாடி அவற்றின் மேலாதிக்க நிலையினால் தங்கள் தனித்துவத்தை இழந்து விட்டார்கள். விடுதலைச் சிறுத்தைகளும் சரி, புதிய தமிழகம் கட்சியும் சரி தங்கள் இலக்குகளான தலித்துகளுக்கு சமூக நீதியையும் உரிமையையும் பெற்றுத் தருவதை மறந்து, தமிழினப் பிரச்னையை எடுத்துக் கொண்ட அரசியல்வாதிகளாகிவிட்டனர்” என்கிறார்.
தமிழகத்தில் மூன்று ஆண்டுகள் தலித்துகளுடன் தங்கி அவர்களைப் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் காரின்ஞ். தலித்துகள் பற்றி நான்கு புத்தகங்கள் எழுதியிருப்பவர். தலித்துகள் பற்றிய அத்தனை விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். “அரசியல் கட்சிகளுடன் இணைந்தாலும் தலித்துகள் அந்த அணியில் ஒரு வலிமையான அழுத்தம் தரும் ஒரு குழுவாக, சக்தியாக இல்லாததால் எதுவும் சாதிக்க முடியவில்லை” என்றும் இவர் கூறுகிறார்.
“அரசியலில் சாதித்தது கிடக்கட்டும் தலித்துகளுக்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? இன்னும் கிராம டீக்கடைகளில் இரட்டை தம்ளர் முதற்கொண்டு எல்லாக் கொடுமைகளும் தொடர்கின்றன. அந்த அவலங்களை எதிர்த்துப் போராடி வெற்றிபெற முடியாத நிலையில் இருக்கிறார்கள் இந்தத் தலைவர்கள்” என்கிறார் தீண்டாமை தடுப்புச் சட்டத்தினைப் பலப்படுத்துவதற்கான தேசியக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பிரஸாத்.
“இக்கூட்டமைப்பு வெளியிட்டிருக் கும் ஓர் அறிக்கை திடுக்கிட வைக்கிறது. இன்னும் 80 சதவிகிதம் தலித்துகள் கிராமங்களில் குறைந்தபட்ச வசதிகூட இல்லாத வாழ்க்கை, ஐம்பது சதவிகிதத்தினருக்கு மேல் படிப்பறிவில்லாத நிலை என்று அவதிப்படுகிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருபத்தெட்டு மாவட்டங்கள் தலித்துகளுக்கு அநீதி இழைக்கப்படும் பகுதிகளாக அடையாளம் காட்டப்பட்டிருந்தன. இது இன்னும் அப்படியே நீடிக்கிறது. நீண்ட நாட்களுக்கு முன் இந்த மாவட்டங்களைக் கண்காணித்து முதல்வருக்கு அறிக்கை அனுப்ப ஐவர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் இன்னும் ஒரு அறிக்கைகூட தரவில்லை. அரசும் எந்த ஆணையும் போடவில்லை. குறைந்தபட்சம் இவற்றுக்காகவாவது தலித் தலைவர்கள் போராடியிருக்க வேண்டும்” என்கிறார் இவர்.
கடந்த இருபது ஆண்டுகளில் படித்த தலித் இளைஞர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தங்கள் இனத்தை அடையாளங் காட்டும் கட்சியை விட ஒரு பிரபல அரசியல் கட்சியில் நேரடியாகப் பங்குகொள்வது பலனளிக்கும் என்று எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். இதை தே.மு.தி.க.வில் பார்க்க முடிகிறது என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர்.
தேர்தலில் இவர்கள் சக்தியாக இருப்பார்களா, மாட்டார்களா என்பதை ஆராய்ச்சியாளர்களுக்கு விட்டுவிட்டு, சந்தேகப்பட்டு வாய்ப்பைக் கெடுத்துக் கொள்வானேன் என்று மளமள-வென காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டனர் கூட்டணியினர். ராசாவுக்கு எதிராக விடுத்த அறிக்கைகளினால் எங்கே தலித்துகளைப் பகைத்துக் கொண்டு விடுவோமோ என்ற எண்ணத்தில் அ.தி.மு.க. தனது அணியின் முதல் தொகுதி உடன்பாட்டை தலித் கட்சிகளுடன் செய்துகொண்டது. அ.தி.மு.க., டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு இரண்டு தொகுதிகளையும், செ.கு. தமிழரசனின் இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு தொகுதியையும் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
செ.கு. தமிழரசன் (தலைவர் இந்தியக் குடியரசுக் கட்சி) சொல்கையில்...
“தமிழகத்தில் இப்போதுள்ள தலித் விரோத அரசை அகற்ற, தமிழ்நாட்டில் உள்ள அடித்தளத்து மக்கள் அனைவரையும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அணி திரட்டிட, எங்கள் கட்சியினர் மிகக் கடுமையாக உழைப்பார்கள். தேர்தலில் அ.தி.மு.க. அணிக்கு வரலாறு காணாத வெற்றி கிடைக்கப் போவது உறுதி!” என்கிறார்.
புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில்...
“அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவதற்கு புதிய தமிழகம் பாடுபடும்” என்றார்.
சிவகாமி (முன்னாள் IAS அதிகாரி - தலைவர் சமூக சமத்துவப்படை)யிடம் ஒரு மினி பேட்டி:
உத்திரப் பிரதேசத்தைப் போல தமிழகத்தில் தலித் சமூகத்தினர் ஏன் ஒரு வலுவான அரசியல் சக்தியாக எழ முடியவில்லை?
“தமிழக அரசியலைச் சற்று ஆழ்ந்து பார்த்தால் தொடக்கத்திலிருந்தே இங்கு தலித்துகளும் அவர்களின் பிரச்னைகளும் தனியாக இனங் கண்டுகொள்ளப்படாமல் பார்ப்பனரல்லாதார் பிரச்னையோடு இணைத்துதான் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளில் தலித்துகளுக்குப் பிரதிநிதித்துவம் கொடுப்பதாகச் சொல்லி அப்படிக் கொடுக்கப்பட்டவர்களின் மூலம் தங்கள் கட்சியைப் பலப்படுத்தினார்களே தவிர தலித்துகளைத் தலைவர்களாக வளர விடவில்லை. காங்கிரஸ், திராவிடக் கட்சிகளில் தலித்துகளின் பிரதிநிதிகளாக அறியப்படுபவர்கள், தலித்துகளுக்காக எதுவும் செய்யவில்லை. செய்ய முயற்சித்தால் அவர்களுக்கு அந்தக் கட்சியில் முக்கிய இடமில்லை என்பதுதான் உண்மை நிலை. கட்சியில் தங்களுக்குக் கிடைத்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள, தலைமையைத் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயச் சூழலில் தாங்கள் தலித்துகளின் பிரதிநிதியாகத்தான் இந்தக் கட்சியில் இருக்கிறோம் என்பதையே அவர்கள் மறந்து போனார்கள். ஒரு வலுவான அரசியல் சக்தியாக தலித்துகள் எழ இன்றைய பணபலம், ஆதிக்க அரசியல் சூழலில் இன்னும் காலம் பிடிக்கும்.”
அடிப்படையான இலக்குகள் ஒன்றாக இருக்கும்போது ஏன் இத்தனை பிரிவுகள்? ஒரே தலைமையின்கீழ் வலுவான இயக்கமாக வாய்ப்புகள் இல்லையா?
“பிரிவுகளாக இருந்து இயங்குவதில் என்ன தவறு? எந்த அணியானாலும் கிடைக்கும் வாய்ப்புகளுடன் வளர வேண்டிய சூழ்நிலை இன்று. குறைந்தபட்சத் திட்டம், அதிகாரத்தில் பங்கு எனக் கேட்கக்கூடிய நிலையில் இன்று தலித் கட்சிகள் இல்லாமலிருக்கலாம், ஆனால் அந்த நிலைக்கு வளர இம்மாதிரி அணிகளிலிருக்கும் சிறு கட்சிகளாக தலித்துகள் இருப்பது உதவுமே” என்று முடித்தார் சிவகாமி.
கடந்த 2006 தேர்தலில் தி.மு.க. பெற்றது 26.46 சதவிகிதம் வாக்குகள். இது அ.தி.மு.க. பெற்ற வோட்டுகளின் சதவிகிதத்தைவிட (32.64%) குறைவு என்றாலும் அவர்களைவிட 35 தொகுதிகளில் வெற்றிபெற முடிந்ததற்கு, கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரின் வோட்டுகளும் ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது.
இப்போது பிரசாரமும் தலித் தொகுதிகளிடமிருந்து தொடங்கும் என அறிவித்திருக்கிறது அ.தி.மு.க.! தாமதமானால் எங்கே ஏதாவது மூன்றாவது அணி எழுந்து அதில் போய்ச் சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, பத்து சீட்டுகளுடன் வரவேற்றுவிட்டது. தேர்தலின் வெற்றிகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப் போகிறார்களோ இல்லையோ கூட்டணிகளின் தலைமைக் கட்சிக்கு நி்ச்சயமாக பயம் ஏற்படுத்தும் சக்தியாகத்தான் தலித் கட்சிகள் இருக்கின்றன.

No comments: