இதுவரையில்லாத அளவு தேர்தல் விதிமீறல்கள் பதிவு செய்ய்ப் பட்டிருப்பதாக ஒரு புறம் செய்திகள் தெரிவிக்கின்றன. மறுபுறம், தேதல் ஆணையம் இது வரை இல்லாத அளவு கெடுபிடிகளைச் செய்து வருவதாகவும் அரசியல் கட்சிகள் புலம்புகின்றன. கருணாநிதியோ அறிவிக்கப் படாத நெருக்கடி நிலைமை நிலவுவதாகச் சொல்கின்றார்.
தமிழ்ப் பத்திரிகைகள் இவை குறித்த பெரிய விமர்சனங்கள் எதையும் முன்வைக்காமல் இருந்த நிலையில், தினமணியின் 04 04 2011 அன்றைய தலையங்கம், யாருக்கு நெருக்கடி என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் ஆளுங்கட்சிக்கு மட்டுமே மூச்சுத் திணறலை ஏற்படுத்துகின்றது என்று வாதிடுகின்றது இந்தத் த்லைய்ங்கம்.
05 04 2011 அன்று வெளிவந்த மற்றுமொரு தலையங்கம், தேர்தலில் காணப்படும் அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் குறித்த் கவலை தொடர்பானது. இரு தலையங்கங்களையும் கீழேயும் வாசிக்கலாம். அல்லது, திணமணியின் இணைய தளம் சென்றும் வாசிக்கலாம். உரிய சுட்டிகள் கீழே தரப்பட்டுள்ளன.
தமிழ்ப் பத்திரிகைகள் இவை குறித்த பெரிய விமர்சனங்கள் எதையும் முன்வைக்காமல் இருந்த நிலையில், தினமணியின் 04 04 2011 அன்றைய தலையங்கம், யாருக்கு நெருக்கடி என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் ஆளுங்கட்சிக்கு மட்டுமே மூச்சுத் திணறலை ஏற்படுத்துகின்றது என்று வாதிடுகின்றது இந்தத் த்லைய்ங்கம்.
05 04 2011 அன்று வெளிவந்த மற்றுமொரு தலையங்கம், தேர்தலில் காணப்படும் அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் குறித்த் கவலை தொடர்பானது. இரு தலையங்கங்களையும் கீழேயும் வாசிக்கலாம். அல்லது, திணமணியின் இணைய தளம் சென்றும் வாசிக்கலாம். உரிய சுட்டிகள் கீழே தரப்பட்டுள்ளன.
தலையங்கம்: நெருக்கடியான நிலைமைதான்!
First Published : 04 Apr 2011 01:28:00 AM IST
Last Updated : 05 Apr 2011 01:15:50 AM IST

கடந்த இரண்டு நாள்களாக முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் வெளிப்படுத்தும் கருத்துகள் திகைப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. பொறுப்பான பதவியில் இருப்பவர், அரை நூற்றாண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர், தமிழகத்தில் மிக அதிகமான காலம் முதல்வராக இருந்தவர், நிர்வாகம் நன்றாகத் தெரிந்தவர் பேசுகிற பேச்சாக அது இல்லை என்பதுதான் திகைப்புக்கும், அதிர்ச்சிக்கும் காரணம்.தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்ற சூழல் நிலவுவதாகவும், தமிழகத்தை ஆட்சி செய்வது தனது தலைமையிலான தி.மு.க.தானா இல்லை வேறு யாராவதா என்று தெரியவில்லை என்றும் முதல்வர் பேசியிருப்பதுபோல வேறு யாராவது பேசி இருந்தால், "ஏன் இவர் இப்படியெல்லாம் உளறுகிறார்? இவருக்கு என்னவாயிற்று?' என்று கேட்கலாம். பேசியிருப்பவர் பல முறை முதல்வராக இருந்தவர். நிர்வாகம் தெரிந்தவர். ஆட்சியில் இருப்பவர்.ஒரு மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால், அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதும், தேர்தல் காலங்களில் ஆட்சியில் இருப்பது அதிகாரம் இல்லாத வெறும் காபந்து அரசுதான் என்பதும்கூட, ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவருக்குத் தெரியாமல் இருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை.""தமிழ்நாட்டை என் தலைமையிலான தி.மு.க. ஆண்டு கொண்டிருக்கிறதா அல்லது தேர்தல் ஆணையம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது'' என்று கூறிவிட்டு, ""தேர்தல் ஆணையத்திடம் மோதிக்கொள்ள விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சட்டப்படி எல்லாம் நடக்க வேண்டும். இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை'' என்றும் கூறுகிறார். பிறகு, தேர்தல் ஆணையத்தின்மீது ஆத்திரத்தை உமிழ்வானேன்?முன்பெல்லாம் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்குக் கெடுபிடிகள் செய்யவில்லை என்றால், அந்த அளவுக்கு விதிமுறை மீறல்களும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் நடக்காமல் இருந்ததுதான் காரணமே தவிர, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லாதது அல்ல காரணம். அரசியல் சட்டம் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாகவே இருக்கிறது. அரசியல் சட்டப்பிரிவு 324(1) தேர்தல் ஆணையத்துக்குத் தேர்தலை முறையாக நடத்துவதற்காக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படுவது வரை பரவலான, முழுமையான அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அதைப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.முறையான தேர்தல் நடத்தப்பட முறையான அதிகாரிகள் தேவை. அன்றைய ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் முறையாகத் தேர்தல் நடைபெற உதவ மாட்டார்கள் என்று ஆணையம் கருதினால் அவர்களை மாற்றவும், தனது நம்பிக்கைக்குரியவர்களை நியமிக்கவும் ஆணையத்துக்கு அரசியல் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-ன் 13சிசி பிரிவுப்படி, தேர்தல் கால நடவடிக்கைகளுக்காகத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் அத்தனை அதிகாரிகளும், அரசு ஊழியர்களும், ஆணையத்துக்குத் தாற்காலிகமாக வழங்கப்பட்ட, ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட ஊழியர்கள்.போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் செல்வாக்கு ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ போட்டியிட வேண்டுமே தவிர, பொருளாதார ரீதியாகப் போட்டியிடுவதை எப்படி ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும். சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தினக்கூலித் தொழிலாளியும், கோடீஸ்வரப் பிரபுவும் போட்டியிட வாய்ப்புள்ள தேர்தல் முறையில், பணத்தை விநியோகித்து ஒருவர் வாக்குச் சேகரிப்பதை ஆணையம் எப்படி அனுமதிக்க முடியும்?முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தேர்தல் ஆணையம் விடியோ படமெடுக்கிறது. அப்படிப் படமெடுப்பவரைத் தடுப்பதும், தாக்குவதும் விவரம் இல்லாதவர்களாக இருந்தால் பரவாயில்லை. முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய மத்திய அமைச்சருடன் செல்பவர்கள் வட்டாட்சியரை மிரட்டுவதும், விடியோகிராபரைத் தாக்குவதுமாக இருந்தால், ஆணையம் கெடுபிடிகளை மேலும் அதிகரிப்பதில் என்ன தவறு?மதுரை பாத்திமா கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் உ. சகாயம் நல்ல சில கருத்துகளை மாணவர்களுக்குக் கூறுகிறார். ""நமது வாக்குகள் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி பெற்றவை. எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். அதேசமயம், அன்பளிப்பு இல்லாத வாக்குப் பதிவு அவசியம். லஞ்சமில்லாத வாக்களிப்பு குறித்து மாணவ மாணவியர் தங்களது பெற்றோருக்கும், உற்றார் உறவினருக்கும் கைப்பேசி மூலம் "என்னுடைய வாக்கு விற்பனைக்கல்ல' எனும் வாசகத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று பேசுகிறார்.மாவட்ட ஆட்சியர் சகாயம் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார் தி.மு.க. அனுதாபி ஒருவர். வாகனங்களைச் சோதனையிடுகிறார்கள், எங்களது சுதந்திரம் தடைபடுகிறது என்று மற்றொருவர் வழக்குத் தொடுக்கிறார். மாவட்ட ஆட்சியர் என்னை மிரட்டுகிறார் என்கிறார் இன்னொருவர். மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்? என்று ஏன் யாரும் முதல்வரிடம் திருப்பிக் கேட்பதில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.காவல்துறை வாகனத்தில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸில் பணம் கடத்தப்படுகிறது. இதையெல்லாம் ஆணையம் தட்டிக் கேட்டால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக முதல்வர் எரிச்சலடைகிறார். வாக்குகள் விலைபேசப்படாமல், வாக்காளர்கள் கவர்ச்சி வாக்குறுதிகளால் ஏமாற்றப்படாமல், முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய முதல்வர், தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்படுவதை நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக வர்ணித்திருப்பது ஒருவகையில் நியாயம்தான்.நெருக்கடியான நிலைமை ஏற்பட்டிருப்பது உண்மை. அது யாருக்கு என்பதுதான் கேள்வி...!
வாழ்க பணநாயகம்!
பணக்காரர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டி போட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டால், ஜனநாயகத்துக்கு அதைவிடப் பெரிய ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. ஒன்றிரண்டு தேர்தல்களில் வேண்டுமானால் இது செல்லுபடியாகுமே தவிர, இதுவே பரவலான அதிருப்தியையும், மக்களாட்சிக்கு எதிரான மனப்போக்கையும் ஏற்படுத்தித் தீவிரவாதிகளுக்குத் தீனிபோடும் சூழ்நிலைக்குத் தேசத்தைத் தள்ளிவிடக்கூடும்.2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 240 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகிறார்கள். அதில் முதலிடத்தில் இருக்கும் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எச். வசந்தகுமார், ஊரறிந்த வியாபாரி. தமிழகத்தின் மிகப்பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளர். இவருக்கு ரூ. 133 கோடி சொத்து இருப்பதில் குற்றம் காண முடியாது. ஆனால், எந்தவிதப் பின்னணியும் இல்லாத பலர் கோடீஸ்வரர்களாக வலம் வருவது எப்படி என்பதுதான் புரியவில்லை.240 வேட்பாளர்களில் 75 பேர் அதிமுகவினர். 73 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் (33), பாஜக (25), தேமுதிக (12) பாமக (11) போன்ற கட்சிகள் மட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள்கூடத் தங்களது வேட்பாளர்களாகக் கோடீஸ்வரர்களைக் களமிறக்கி இருக்கின்றன என்பதுதான் வியப்புக்குரிய ஒன்று.ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்தால் ஐம்பது தலைமுறை வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம் போலிருக்கிறது. எப்படித்தான் இவர்களுக்கு இவ்வளவு சொத்துச் சேருகிறது என்று யாரையும் கேட்கவிடாமல் இருப்பதற்காகவே, நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதுபோல, தனது தொகுதியிலுள்ள வாக்காளர்களின் வீட்டில் நடைபெறும் நல்லது கெட்டதுக்கு "மொய்' எழுதிவிடுகிறார்கள். அவர்களும் "அள்ளிக் கொடுக்கும் வள்ளல்' என்று வாயாரப் புகழ்ந்து வாலாட்டவும் செய்கிறார்கள்.தமிழக உணவு அமைச்சர் எ.வ. வேலு கடந்த 2006 தேர்தலில் போட்டியிடும்போது தனது வேட்புமனுவுடன் இணைத்திருந்த சொத்து விவரப்படி, அவரிடம் ரூ. 60,000 மதிப்புள்ள 1.1 ஏக்கர் விவசாய நிலமும், வெறும் ரூ. 15,000 மதிப்புள்ள நகைகளும், வங்கியில் ரூ. 25,000 இருப்பதாகவும் கணக்குத் தாக்கல் செய்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவரது வங்கிக் கணக்கில் ரூ. 17.47 லட்சம் இருக்கிறது. ரூ. 1.75 கோடி மதிப்புள்ள விவசாய நிலங்கள் உள்ளன. அவரது வீட்டின் மதிப்பு ரூ. 4.5 கோடி. சொத்து பத்து எதுவும் இல்லாமல் இருந்த அவரது மனைவிக்கும் இப்போது லட்சக்கணக்கில் சொத்து சேர்ந்திருக்கிறது.அவரை விடுங்கள் பாவம். தனது பெயரிலும், மனைவி பெயரிலும்தான் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறார். முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களைவிடத் தங்களது மனைவியின் பெயரிலும், அதைவிட அதிகமாகத் துணைவியின் பெயரிலும் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறார்களே, அவர்களை என்ன சொல்ல?முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு வெறும் ரூ. 4.92 கோடி மட்டுமே. அவரைவிட அவரது மனைவி தயாளு அம்மாளுக்குச் சொத்து அதிகம் - ரூ. 15.45 கோடி. அதைவிடத் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு அதிகம் - ரூ. 23.97 கோடி. தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்து மதிப்பு ரூ. 75.18 லட்சம் மட்டும்தானாம். அவரது மனைவி ரங்கநாயகியின் சொத்து மதிப்பு ரூ. 93 லட்சம். ஆனால், துணைவியார் லீலாவின் சொத்து எவ்வளவு தெரியுமா? ரூ. 2.25 கோடி.அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், பெரியகருப்பன், பரிதி இளம்வழுதி, என். செல்வராஜ், வெள்ளக்கோவில் சாமிநாதன், தங்கம் தென்னரசு என்று இவர்களைவிட இவர்களது மனைவிகளுக்குத்தான் பல மடங்கு அதிகமாகச் சொத்துக் குவிகிறது. எந்தப் பதவியும் வகிக்காத அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர முடியாது. கேட்டால் வியாபாரம் செய்கிறார்கள் என்றோ, இப்போது யாரைக் கேட்டாலும் சொல்லும் பதிலான "ரியல் எஸ்டேட் செய்து சம்பாதித்தது' என்றோ கூறுவார்களோ என்னவோ...சட்டப்பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில் எப்படி இவ்வளவு சொத்துகளைத் தங்கள் பெயரிலும், தங்கள் உறவினர்கள் பெயரிலும் வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதைத் தட்டிக் கேட்க வேண்டிய வருமானவரித் துறையோ, லஞ்ச ஊழல் தடுப்புத் துறையோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே கிடையாது. கேட்டால் ஆடிட்டர் மூலம் முறையாகக் கணக்குத் தாக்கல் செய்து வரியும் கட்டி இருக்கிறார்கள் என்று பதிலளித்து விடுகின்றனர். முறைகேடாகச் சம்பாதித்து முறையாக வரி கட்டி விட்டால் நேர்மையான மனிதர் என்று நற்சான்றிதழ் கொடுக்கப்படும் ஒரே தேசம் நமது இந்தியாவாகத்தான் இருக்கும்.ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று வேறுபாடே இல்லாமல் கோடீஸ்வரர்களை அடையாளம் கண்டு வேட்பாளர்களாகக் களமிறக்கி இருக்கின்றன. வேட்பாளர் தேர்வுக்கு வரும்போதே "உங்களால் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்?' என்கிற கேள்வியுடன்தான் நேர்முகமே தொடங்குகிறது. பணம் கொடுத்து வேட்பாளர்களானதாகக் கூறப்படுகிறது. அரசியல் என்பது மக்கள் சேவைக்கான ஒன்றாக இல்லாமல் ஆதாயம் தரும் தொழிலாக மாறிவிட்டதன் காரணம் இதுதான்.தெருக்கோடியில் மக்கள், பல கோடிகளில் புரளும் வேட்பாளர்கள். வாழ்க பணநாயகம்!
No comments:
Post a Comment