Sunday, 27 March 2011

அரசியல் இயக்கங்கள் மீது துவேஷம் காட்டும் தினமலர்

ஒரு செய்தியைத் தனது பார்வைக்கு ஏற்ப எப்படியெல்லாம் வளைத்துத் திரிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இதைக்  குறிப்பிடலாம்:
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்திற்காக, சிறிய கட்சிகள் முயன்று கொண்டே இருப்பதும், அதற்காக தேர்தல் ஆணையம் பல விதிகளை விதித்திருப்பதும் நாம் அறிந்தது தான். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இது குறித்து விரிவாக நியதிகளை வகுத்துள்ளது. இந்தச் சட்ட்த்தில் சில திருத்தங்களும் அறிமுகப் படுத்தப் பட்டுமுள்ளன.
2011 தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தனக்கென தனிச் சின்னம் கோரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்தச் சூழலில் இன்று தினமலரிலும், தினமணியிலும் இது தொடர்பான இரு செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்கீகரிக்கப் படாத கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் வழிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள்தாக தினமணியின் செய்தி தெரிவிக்கின்றது. சின்னம் கோரி அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து மார்ச் 30க்குள் முடிவெடுக்கப் படும் என்றும் தினமணியின் செய்தி சொல்கின்றது (தினமணியின் செய்தி கீழே தரபட்டுள்ளது).

ஆனால், தினமலர் செய்தி, விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் ஆணையத்திடம் தவறான தகவல் தந்திருப்பது போலவும், அந்தத் திருட்டுத் தனத்தைத் தான் கண்டுபிடித்து அம்பலப் படுத்திவிட்டதாகவும் முதற் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது (தினமலரில் வெளிவந்த செய்தி கீழே தரப்பட்டுள்ளது).

தினமலரின் செய்தியின்படி,   ஒரு வேளை விசிக வின் செயலில் தவ்றிருந்தாலும், அது குறித்து விசிகவின் அமைப்பாளர்களில் ஒருவரிடம் கருத்துக் கேட்டு, தனது குற்றச் சாட்டை உறுதிப்படுத்தி வெளியிட்டிருக்க
வேண்டாமா?  ஒருவர் மீது குற்றஞ்சாட்டும் போது, குறிப்பாக, அபாண்டமாக அவதூறு செய்யும் வகையில் செய்திகளை எழுதும்போது,  குற்றஞ்சாட்டப் படுபவரது தரப்பு நியாயத்தையும் கேட்டு அதையும் பதிவு செய்திருக்க வேண்டாமா?

எந்த நாளில் இந்தக் கோரிக்கையினை விசிக, தேர்தல் ஆணைய்ம் முன்வைத்தது. தொடக்கத்திலிருந்தே திமுக அணியில் கூடுதல் இடங்களைக் கேட்டுக் கொண்டிருந்த விசிக, தான் திட்டமிட்டபடியே, தேர்தல் ஆணையத்திடம் மனுவைக் கொடுத்து சின்னம் கோரியிருக்கலாம். திமுக தலைமை, 10 சீட்டுகளே ஒதுக்க முடியும் என்றதும் அதை விசிக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது, தேர்தல் ஆணைய்ம் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உரிய விதிகளின்படி, தகுதி பெறாத கட்சிகளுக்கு ஒரே சின்னத்தை ஒதுக்காமல், அவற்றைச் சுயேட்சையாகக் கருதி, ஒவ்வொரு தொகுதி வாரியாக சின்னங்களை ஒதுக்க்லாம். அப்போதும் மெழுகுவர்த்தி சின்னத்திற்கு பிற சுயேட்சைகள் போட்டியிடாத வரை, விசிக போட்டியிடும் 10 தொகுதிகளுக்குமே மெழுகுவர்த்தி சின்னம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதுதான் செய்தியாக வெளியிடப் பட்டிருக்க வேண்டும். தேர்தலைப் பார்வையாளராக இருந்து கவனிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமே இந்தப் பிரச்னை எளிதாகப் புரியும் போது, தேர்தலில் புகுநது, தனது விருப்பு வெறுப்புகளின் படி, அரசியல் கட்சிகள் மீது துவேஷத்தைக் காட்டுவது எவ்வகையில் அறம்?
தினமலரில் வெளிவந்த செய்தி :




  
தினமணியில் வெளிவந்த செய்தி :



அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவது எப்படி? தேர்தல் ஆணையம் விளக்கம்
  
சென்னை, மார்ச் 26: அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படுகின்றன என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.  இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:  தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில, தேசிய கட்சிகள் ஒன்பது உள்ளன. மேலும், ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்து விட்டு அதேசமயம், அங்கீகாரம் பெறாத கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன.  உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட சின்னங்கள் அளிக்கப்படுகின்றன. பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 சதவீத இடங்களில் ஒரு கட்சி போட்டியிட வேண்டும்.  இதனால், அந்தக் கட்சிக்கு மோதிரம் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி மோதிரம், மட்டை, பட்டம் ஆகிய சின்னங்களை கோரி இருந்தது.  விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் அளிக்கப்பட்டுள்ளது. கூடை, தேங்காய், முரசு ஆகிய சின்னங்களை அந்தக் கட்சி கோரியிருந்தது. புதுச்சேரியில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு கூஜா சின்னம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தச் சின்னத்துடன், மோதிரம், மின்கம்பம் ஆகியவற்றை அந்தக் கட்சி கோரியிருந்தது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையத்திடம் அறிவித்து இருந்தது. ஆனால், தி.மு.க. அணியில் அந்தக் கட்சி 10 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.  அந்தக் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சின்னத்துடன் நட்சத்திரம், மணி ஆகியவற்றை கோரியிருந்தது. அம்பேத்கர் மக்கள் இயக்கத்துக்கு மின்கம்பம் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.  மக்கள் மாநாட்டுக் கட்சிக்கு மேஜை விளக்கு சின்னம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி மோதிரம், மேஜை விளக்கு, மேஜை ஆகியவற்றை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.  இதுகுறித்த விவரங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெற்று அனைத்து விவரங்களையும் தொகுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிட வேண்டும்.  வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி தினத்துக்கு முன்பாக இந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.  23 தொகுதிகளுக்கு குறைவாகப் போட்டியிடும் கட்சிகளுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தால் அது குறித்து மார்ச் 30-ம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Source :Dinamani




No comments: