Tuesday, 29 March 2011

விசிக குறித்து அவதூறு வெளியிட்ட தினமலர் தவறை ஒப்புக்கொள்ள மறுப்பு

கடந்த வார இறுதியில், தினமலர் இதழின் முதல் பக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,  தேர்தல் சின்னம் பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற முயல்வதாக ஒரு குற்றச் சாட்டு வெளியாகியிருந்தது.  அதே நாளில் தினமணியில் தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டி தினமணியில் வெளியான ஒரு செய்தியில், சின்னங்கள்
எப்படி  ஒதுக்கப் படுகின்றன என்று ஒரு செய்தியும் வெளியாகியிருந்தது.
இந்த இரு செய்திகளின் அடிப்படையில் எங்களின் ஆய்வுக்குழு, தினமல்ர் தவறாக செய்தி வெளியிட்டிருப்பதாகக் கண்டறிந்தது.
இதற்கிடையில், தொல் திருமாவளவன், தாங்கள் பொதுச் சின்னம் பெறுவதற்காக யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
தவறான செய்தியை வெளியிட்ட தினமலர், இது குறித்து வருத்தமும் தெரிவிக்கவில்லை. திருமாவளவனின் விளக்கத்தை வெளியிட்டு தனது வாசகர்களுக்கு உண்மை நிலவரத்தைப் புரியவைக்கவும் இல்லை.
தினமலர் தனது வாசகர்களை இவ்வளவு மோசமாக நடத்துவது ஏன் என்பது விளங்கவில்லை.
தெரிந்தே தவறு செய்வது, தவற்றை ஒப்புக் கொள்ள ம்றுப்பது, விளக்கம் அளிக்கப்  படும்போதுஅதனை வெளியிட மறுபப்து ஆகிய் செயல்கள், எவ்வகையில் ஏறகத்தக்கது என்பது எங்களுக்கெல்லாம் விளங்கவேயில்லை. இதை இதழியல் அடாவடித்தனம் என்று வகைப் படுத்த இயலுமா? இந்தியாவில் இது போன்ற மனப்பான்மையுடன் இயங்கும் இத்ழ்கள் வேறு உள்ளனவா? சர்வதேச ரீதியில் இது போன்றுபத்திரிகைகள் இயங்குகின்றனவா என்பவற்றைப் பேராசிரியர்கள் விளக்க வேண்டும்.
 தினத்தந்தியில் வெளியாகியுள்ள செய்தி 

பொதுச்சின்னத்தை பெறுவதற்காக
`தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை' : தொல்.திருமாவளவன் பேட்டி


திட்டக்குடி, மார்ச்.28-

`விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொதுச்சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தை நாங்கள் ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை' என்று திட்டக்குடியில் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வந்திருந்த கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திட்டக்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏமாற்ற வில்லை

`விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற கட்சியாகும். முன்னுரிமை அடிப்படையில் நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் ஒரே சின்னத்தை பெறவே தொகுதிகளை குறிப்பிட்டு மனு செய்திருந்தோம்.

இதில் நாங்கள் தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணியில் எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின்பு அதன் விவரத்தை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து விட்டோம்.

வெற்றி வாய்ப்பு

வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்கள் கூட்டணி தர்மத்தை எப்போதும் மாற மாட்டோம். அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் எங்களுடன் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு தரவேண்டும் என்பது குறித்து கட்சியின் தலைவர் தங்கபாலு, மத்திய மந்திரி ஜி.கே.வாசன் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.

முன்பு நான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே தவிர வேறல்ல. இதனை தொகுதி மக்கள் தவறாக கருதவில்லை. என்னையடுத்து இங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் (செல்வப்பெருந்தகை) கட்சி மாறினாரே தவிர எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை.

2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இடைபட்ட சில மாதங்கள்தவிர நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் உள்ளோம். எனவே எங்களை அணி மாறுபவர்கள் என குற்றம் சாட்ட வாய்ப்பில்லை. சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்களை பழிசுமத்துவது பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை.

திட்டக்குடி வேட்பாளர்

திட்டக்குடியில் தொகுதி வேட்பாளர் சிந்தனைச்செல்வன் 1986-ம் ஆண்டிலேயே இந்துவாக மீண்டும் மதம் மாறிவிட்டார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்கள்தான். இதனால் சிந்தனைச்செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தவறான தகவல் எதையும் கூறவில்லை. எனவே அவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.

தேர்தல் ஆணையமானது மனித உரிமைகளை மீறும் வகையில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு முறையற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ஆணையம் மதிப்பதில்லை. எனவே தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவேண்டும்.

மேற்கண்டவாறு தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Source : Dailythanthi.com






No comments: